தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டாக தங்கியிருந்தார் பாஜவில் கட்சி அளித்த அறையை காலி செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: கடந்த 10 ஆண்டாக பாஜ தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறையை திடீரென காலி செய்தார். தமிழக பாஜ தலைவராக பொறுப்பேற்றதும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தி.நகரில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முதல் மாடியில் தங்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பிறகு தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார். இதனால், மாநில தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழக பாஜ புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று டெல்லி மேலிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்த அறையை திடீரென காலி செய்துள்ளார். தற்போது அவர் அண்ணாநகரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏன் அறையை காலி செய்தார் என்று பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. டெல்லி மேலிடம் அழுத்தம் காரணமாக அவர் காலி செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் முதல் இன்று வரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. தலைவர் இல்லாததால் பொன்.ராதாகிருஷ்ணன் தான் பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவிப்பது மற்றும் கட்சி ரீதியான அறிக்கையையும்  வெளியிட்டு வந்தார். சொல்லப்போனால் தலைவர் ஸ்தானத்தில் இருந்து கட்சியை வழிநடத்தி வந்தார். தற்போது அவர் அறையை காலி செய்திருப்பது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி பதவி மற்றும் அரசு பொறுப்பு எதுவும் இல்லாத நிலையில் பாஜ அலுவலகத்தை காலி செய்து இருப்பதாக தொண்டர்கள் பேசிக் கொள்கின்றனர்.

Related Stories: