நாட்டின் மதிப்பை மோடி கெடுத்து விட்டார் பலாத்காரத்தின் தலைநகரமானது இந்தியா: ராகுல் காந்தி ஆவேசம்'

ஜெய்ப்பூர்: `உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை பிரதமர் மோடி கெடுத்து விட்டதால், தற்போது இந்தியா பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக அறியப்படுகிறது,’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ராம் நிவாஸ் மைதானத்தில் வேலை வாய்ப்பின்மை தொடர்பாக `இளைஞர்களின் கோபம்’ என்ற பொதுக் கூட்டத்தை காங்கிரஸ் நேற்று நடத்தியது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பாஜ தலைமையிலான மத்திய அரசு, முதலீட்டாளர்களை தடுக்கும் நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது. இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கும் என்று கூறிய நிலையில், கடந்தாண்டு ஒரு கோடி பேர் வேலையிழந்து உள்ளனர். நாட்டில் உள்ள இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம், வேலை வாய்ப்பு பற்றி அரசுக்கு கேள்வி எழுப்புங்கள். ஒருபோதும், உங்களுடைய குரல் ஒடுக்கப்பட்டு விட விடாதீர்கள்.

உலக அரங்கில் அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்தியா இருந்தது. இதனால், முரண்பட்ட பாகிஸ்தானுடன் இந்தியா ஒப்பிடப்பட்டது. இந்தியாவின் இந்த நன்மதிப்பை  பிரதமர் மோடி கெடுத்து விட்டார். ஆனால், தற்போது இந்தியா பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக அறியப்படுகிறது. இவையெல்லாம் பற்றி பிரதமர் மோடி பேச மாட்டார். இது குறித்தோ அல்லது வேலை வாய்ப்பு குறித்தோ இளைஞர்கள் கேள்வி கேட்டால, அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளாலும், ஒடுக்கு முறையினாலும் பதில் அளிக்கப்படுகிறது. சீனாவுடன் எதிர்த்து போட்டியிடும் வலிமை படைத்த இளைஞர்களே, நாட்டின் மிகப் பெரிய சொத்து. ஆனால், இவர்களை பயன்படுத்தாமல் அரசு வீணடிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: