நியூசிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைக்குமா இந்தியா? ஹாட்ரிக் வெற்றிக்கு வாய்ப்பு

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெறும் டி20 தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அதே மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த நிலையில், 3வது போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

2008-09ல் டோனி தலைமையில் விளையாடிய இந்திய அணி 0-2 என்ற கணக்கிலும் கடந்த ஆண்டு விளையாடிய தொடரில் 1-2 என்ற கணக்கிலும் தோல்வியைத் தழுவியது. தற்போது வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பதால் கோஹ்லி & கோ நிச்சயமாக தொடரை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரன் குவிப்பில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், கோஹ்லி தொடர்ந்து அசத்தி வருகின்றனர். பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பூம்ரா, ஜடேஜ மிகத் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்கின்றனர். 2019 உலக கோப்பை ஒருநாள் தொடருக்குப் பிறகு விளையாடிய 5 டி20 தொடர்களில் (நடப்பு நியூசி. தொடரையும் சேர்த்து) இந்தியா தோல்வியடையாமல் இருந்து வருகிறது. இதில் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த 3 போட்டி தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது (ஒரு போட்டி கனமழையால் கைவிடப்பட்டது).

இந்திய அணி சாதனை வெற்றிக்கு முனைப்பு காட்டும் நிலையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைக்க நியூசிலாந்து வரிந்துகட்டுகிறது. அந்த அணியின் பேட்டிங் ஓரளவுக்கு கை கொடுத்தாலும், பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாதது பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும், செடான் பார்க் மைதானம் அந்த அணிக்கு ராசியானது என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இங்கு விளையாடி உள்ள 9 டி20 போட்டிகளில் நியூசிலாந்து 7ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், ஸ்காட் குகெலெஜின், டாரில் மிட்செல், கோலின் மன்றோ, மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர்.

Tags : series ,India ,New Zealand ,hat-trick ,time , New Zealand, first time, T20, winning record, India? Hatrick wins, chance
× RELATED தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா