ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் பெடரர் - ஜோகோவிச் ஆஷ்லி பார்தி முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சுடன் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் மோதுகிறார். கால் இறுதியில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரெனுடன் நேற்று மோதிய பெடரர் 6-3, 2-6, 2-6, 7-6 (10-8), 6-3 என 5 செட்களில் 3 மணி, 31 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொண்ட ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 2 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது. அரை இறுதியில் ஜோகோவிச் (2வது ரேங்க்) - பெடரர் (3வது ரேங்க்) மோத உள்ளது ரசிகர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில் பெத்ரா குவித்தோவாவை (செக்.) வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா) வென்றார். அரை இறுதியில் ஆஷ்லி பார்தி - சோபியா கெனின் மோதுகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜெலினா ஆஸ்டபென்கோ (லாத்வியா) ஜோடி 2-6, 5-7 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெதானி மேட்டக் சேண்ட்ஸ் - ஜேமி மர்ரே (இங்கி.) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

Tags : Australian Open ,Australian Open Tennis Semi-Final Federer , Australian, Open Tennis, Semi-Finals, Federer - Djokovic, Ashley Bharti, Progress
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்...