யு-19 உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

பாட்செப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் லீக் கால் இறுதியில், 74 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. யு-19 அணி முதலில் பந்துவீசியது. இந்தியா யு-19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62 ரன் (82 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), சித்தேஷ் வீர் 25, ரவி பிஷ்னோய் 30, சக்சேனா 14, ஜுரெல் 15 ரன் எடுத்தனர். கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் வெளியேறினார். அன்கொலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2.3 ஓவரில் 17 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. ரோவி 21 ரன் எடுத்தார். தொடக்க வீரர் சாம் பான்னிங் - லயம் ஸ்காட் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ஸ்காட் 35 ரன், பான்னிங் 75 ரன் (127 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸி. யு-19 அணி 43.3 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி 10 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா யு-19 பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 4 விக்கெட் (8-0-24-4), ஆகாஷ் சிங் 3, ரவி பிஷ்னோய் 1 விக்கெட் வீழ்த்தினர். தியாகி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா யு-19 அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில், 3 முறை சாம்பியனான ஆஸி. அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Related Stories: