இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய ரூ.62 லட்சம் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பெண்கள் உள்பட 4 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

Advertising
Advertising

அப்போது, திருச்சியை சேர்ந்த 3 பெண்களான சர்பூரம்மாள் (31), சமீரா (35), சகிலா பானு (41) ஆகிய 3 பேர் சுற்றுலா பயணியாக போய் விட்டு திரும்பினர். சுங்க அதிகாரிகளுக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்களை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதித்த போது அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் பெண் சுங்க அதிகாரிகள் 3 பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, இவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

3 பேரிடம் இருந்து ரூ.46.65 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பெண்களையும் கைது செய்தனர். அதேபோல நேற்று காலை 10.50 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த தாஜூதீன் (28) என்பவர் சுற்றுலா பயணியாக போய்விட்டு வந்தார். இவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 401 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16.35 லட்சம். இவரையும் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: