வேலைக்கு வெளிநாடு அனுப்பாததால் கடத்தப்பட்ட தரகர் புதுச்சேரியில் மீட்பு: 3 பேரிடம் போலீஸ் விசாரணை

அம்பத்தூர்: அம்பத்தூரில் வேலைக்கு பணம் வாங்கி விட்டு, ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காததால், காரில் கடத்தப்பட்ட புரோக்கரை பாண்டிச்சேரியில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக, 3 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். அம்பத்தூர் அடுத்த ஒரகடம், செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார் (34). இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் வேலை செய்கிறார். இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு திலீப்குமார், வீட்டு அருகே கார் ஒன்று வந்து நின்றது.

அதில் வந்த 3 பேர், வீட்டை விட்டு வெளியில் வந்த திலீப்குமாரை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்தி சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியுடைந்த மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதுகுறித்து சுதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் திலீப்குமாரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதன்பிறகு போலீசார் கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து தேடினர். மேலும், திலிப்குமாரின் செல்போன் டவரை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் பாண்டிச்சேரிக்கு கடத்திச்சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்தனர். இதற்கிடையில், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல், அவரை முத்தியால்பேட்டை காவல நிலையம் அருகே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதன் பிறகு, போலீசார் பாண்டிச்சேரி சென்று திலீப்குமாரை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் காவல் நிலையம் வந்தனர். விசாரணையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப ரூ.10 லட்சம் வாங்கி விட்டு ஆட்களை அனுப்பாமல் பல மாதமாக காலம் தாழ்த்தியுள்ளார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: