வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ரொக்கம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

தாம்பரம்: பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம், தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (35), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் காரைக்குடி சென்றார். அங்கிருந்து, நேற்று காலை வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த துரைமுருகன், உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

Advertising
Advertising

இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பீர்க்கன்காரணை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். எனவே இதுகுறித்து உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: