தமிழகத்தில் தொடரும் கொடுமை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 39% அதிகரிப்பு... தூத்துக்குடியில் 97 போக்சோ வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் சிறுமிகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஒரே ஆண்டில் 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சிறு குழந்தைகள், சிறுமிகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகள் 2019ம் ஆண்டில் 39% அதிகரித்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான மற்றும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 வயது குழந்தைகள் முதல் 17 வயது சிறுமிகள் வரையில் பாரபட்சம் இன்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக விளாத்திகுளம் சப்-டிவிசன், திருச்செந்தூர், ரூரல் மற்றும் டவுன் சப் டிவிசன்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து  வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் தூத்துக்குடியில் அதிகம் நடந்து வருகிறது. இவற்றில் பல சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்காமல் மறைக்கும் நிலையும் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிறு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதானவர்கள் பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்களும் முதியவர்களுமே உள்ளனர். காதல் விவகாரத்தில் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் வழக்கில் சிக்குபவர்கள்  எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட தற்போது குறைந்து வருகிறது.

சிறுகுழந்தைளுக்கெதிரான பாலியல் வண்கொடுமையில் ஈடுபடுவர்களை கடந்த ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட போலீசார் குண்டாசில் சிறையில் அடைத்து  வருகின்றனர். குறிப்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த  ஆண்டு நடந்த குழந்தைகள், சிறுமிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேரை  குண்டர் தடுப்பு சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த  ஆண்டு சிறு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் 9பேர்  குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு சிறுமி  மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஒரு தொழிலாளி ஜாமீனில் வெளி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு கடந்த ஆண்டு தூத்துக்குடி கோர்ட்டில் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ வழக்குகள், குண்டாஸ் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட மாவட்டத்தில் சிறு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மாவட்டம் முழுவதும் இதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுகுழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்காக 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு அடுத்தபடியாக அதிகமான போக்சோ வழக்குகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: