போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு

வேலூர்: தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை. இதனால்  பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளிமாநிலம் மற்றும் வெளியூர் பயணிகள் வசதிக்கென சாய்வு இருக்கைகள் கொண்ட சொகுசு பஸ்கள், ஏசி பஸ்களும் உள்ளூர் நகரங்களுக்கு சாதாரன பஸ்களும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் நடந்த நிர்வாக குளறுபடிகளால் பஸ்களுக்கான பராமரிப்பு பணிகள் முடங்கியது. இதனால் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அரசு பஸ்களில் பயணிப்பதை தவிர்த்து தனியார் பஸ்களை நாடிச் சென்றனர். இதனால் அரசு பஸ்களின் மூலமாக கிடைத்த வருவாய் வெகுவாக குறைந்தது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒருசிலருக்கு தாமதமாக வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடியில் தள்ளாடிய போக்குவரத்து துறையை லாபகரமாக இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதில், புதிதாக பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி கடந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டது. புதிய நிறத்தில் சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பஸ்கள் போக்குவரத்து சேவைக்கு வந்தது. குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு ஏற்ற வகையில் ஸ்லீப்பர் கோச் பஸ்கள், ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெருநகரங்களுக்கு செல்லும் பஸ்களும் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இயக்கப்படுகின்றன.

தானியங்கி கதவுகள், மியூசிக் சிஸ்டம், எச்சரிக்கை அலாரம், அவசர உதவி அழைப்பு பொத்தான், விபத்து காலத்தில் வெளியேற உதவும் கண்ணாடிக் கதவு, தீ விபத்து ஏற்படுவதை தடுக்க உதவும் தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், கல்பாக்கம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரு, திருப்பதி, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாய்வுதள இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய பஸ்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்ட பஸ்களில் பாதுகாப்பு வசதிக்கென அமைக்கப்பட்ட தீ தடுப்பு கருவிகள் தற்போது பெரும்பாலான பஸ்களில் இல்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இன்ஜினில் ஏற்படும் அதிக உஷ்ணம் காரணமாக தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய நெருக்கடி நிலைகளை சமாளிக்கும் விதமாக அனைத்து அரசு பஸ்களிலும் தீ தடுப்பு கருவிகள் வைக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் தற்போது  பெரும்பாலான பஸ்களில் வைக்கப்பட்ட தீ தடுப்பு கருவிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் உள்ளதா? அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசு பஸ்களில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: