அதிக மார்க் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன மாணவி ஐஏஎஸ் ஆக விருப்பம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், நெசவுத்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் காவியா(16) எஸ்எஸ் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2, 2வது மகள் மதுமிதா(14), நெசல் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பும்,  அதே பள்ளியில் மூன்றாவது மகள் பிரியதர்ஷினி 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நெசல் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வெங்கடேசன் மற்றும் 8 ஆசிரியர்கள், 2 அலுவலக பணியாளர்கள் உள்ளனர். பள்ளியில் மொத்தம் 154 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றலாம் என்று வெங்கடேசன் தெரிவித்தார்.

அதன்படி மதுமிதா 447 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து நேற்று காலை இறைவணக்கம் முடிந்தவுடன் தலைமை ஆசிரியர், மாணவி மதுமிதாவை தலைமை ஆசிரியராக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்த்தினார். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மதுமிதா, ஆசிரியர் வருகை பதிவேடு, அலுவலக பணியாளர் வருகைகளை பார்வையிட்டார். பத்தாம் வகுப்பறைக்கு சென்று, மாணவர்களிடம் பாடம் சம்மந்தமான கேள்வி கேட்டார். மேலும் தலைமை ஆசிரியராக ஒரு நாள் வேலை செய்த சம்பளத்தை பள்ளி வளர்ச்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்த கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மதுமிதா கூறியதாவது: ஒருநாள் தலைமை ஆசிரியர் பணியில் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது தலைமை ஆசிரியர் கனவும் நிறைவேறியது.

அதேபோல் என்னை ஊக்கப்படுத்தி தேர்வில் முதல் மதிப்பெண் பெற வைத்த தலைமை ஆசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு. எனக்கு இவ்வளவு பெரிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் கொடுத்த தலைமை ஆசிரியருக்காகவும், எனது பெற்றோருக்காகவும் நான் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவேன்’ என்றார். ஒருநாள் தலைமை ஆசிரியராக இருந்த மாணவி மதுமிதாவிற்கு மாவட்டம் முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Stories: