குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுவாமியார்மடம்: குமரியில் தோண்டிய சாலைகளை மீண்டும் முறையாக மூடுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் திட்டம், கேபிள் பதித்தல் என்பது உள்பட பல்வேறு தேவைகளுக்காக சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதன் பிறகு தோண்டிய சாலைகளை முறையாக மூடுவது இல்லை. ஏதோ கடமைக்கு ஓரளவு மண்ணை போட்டு மூடி செல்கின்றனர். இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் ராட்சத பள்ளங்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக நாளாக நாளாக சாலைகளும் கடுமையாக சேதமடைந்து விடுகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இது தவிர போக்குவரத்துக்கும் கடும் இடையூறாக சாலைகள் உருமாறி விடுகின்றன. இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது ஏன் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பயணம் - ரவிப்புதூர்க்கடை சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சில மாதங்களிலேயே கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்டது. இந்த பணி முடிந்த பிறகு மண் போட்டு நிரப்பினர். தார் அல்லது சிமென்ட் கலவை போட்டு சாலையை முழுமையாக சீரமைக்காமல் ஏனோ விட்டுவிட்டனர்.

இதனால் மழை நேரத்தில் சாலை சகதிக்காடாக மாறியது. இதேபோல் மண் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சாலை தோண்டப்பட்டு வருகிறது. ஆகவே சாலை மீண்டும் மோசமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் சாலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: