ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன் மோதியதில் 5 பேர் பரிதாப பலி... 19 பேர் படுகாயம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிவகாசியை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். வேனில் வந்த 19 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் ஐயப்பன்(33), சுடலைமணி(30), முத்துகுமார்(31), அந்தோணிராஜ்(30) மற்றும் பிரபு(30). நண்பர்களான இவர்கள் 5 பேரும் காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று இரவு புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுடலைமணி ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் கடமன்குளம் பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே மதுரையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கலாக நொறுங்கியது, காரில் இருந்த ஐயப்பன், சுடலைமணி, முத்துகுமார் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பிரபுவும், வேனில் இருந்த செங்கோட்டையை செல்வி(45), மணிகண்டன்(30), மல்லிகா(37), செல்லையா(45) உட்பட 19 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்த பிரபுவையும் மீட்டனர். காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரபு மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபுவும் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் வந்தவர்கள் மதுரையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு, செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தால் ராஜபாளையம்-தென்காசி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து நாங்குநேரியை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்தடையால் சுற்றுலா சென்ற நண்பர்கள்...

இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் சிவகாசியில் அச்சுத் தொழில் தொடர்பான பணிகளில் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். நேற்று சிவகாசி நகர் முழுவதும் நேற்று மின்தடை என்பதால், அச்சகங்கள் இயங்கவில்லை. இதையடுத்து குற்றாலம் செல்லலாம் என நேற்று காலைதான் ஐயப்பன் உள்ளிட்ட 5 பேரும் முடிவு செய்தனர். காரில் குற்றாலம் சென்று அருவிகளில் குளித்து விட்டு, இரவு 11.30 மணியளவில் அங்கிருந்து சிவகாசிக்கு புறப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த சுடலைமணி, தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் நண்பர்கள் 5 பேரும் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: