முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: தமிழக அரசின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்யக்கூடாது... ஆய்வுக்கு பின் கண்காணிப்புக்குழு தலைவர் பேட்டி

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என கண்காணிப்புக் குழு தலைவர் குல்சன் ராஜ் தெரிவித்துள்ளார். மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழுவை நியமித்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்ஷன்ராஜ் உள்ளார்.

தமிழக அரசு பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு முதன்மை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் பி.அசோக் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 4ல் மூவர் கண்காணிப்பு குழு பெரியாறு அணையை ஆய்வு செய்தது. பருவமழை பொய்த்ததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக குறைந்துள்ள நிலையில், அணை பகுதியில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள், மதகுகளின் இயக்கம், கேலரி பகுதியில் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு செய்து அனுப்பி வைத்த அறிக்கையின் பேரில், கண்காணிப்பு குழுவினர் இன்று அணையில் ஆய்வு செய்தனர்.

பெரியாறு மெயின் அணைப்பகுதி, கேலரி பகுதி மற்றும் கசிவுநீர் குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து தேக்கடியில் உள்ள கண்காணிப்பு குழுவினரின் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த குல்சன் ராஜ்; அணை பலமாக உள்ளது. மெயின் அணைக்கும், பேபி அணைக்கும் உள்ள நடைபாதையை தமிழக அரசு பராமரிக்கலாம். தமிழக அரசின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்யக்கூடாது. இது மட்டுமல்லாமல் அணையை 3 நபர் கண்காணிப்புக்குழு மற்றும் மேல்மட்டக்குழுவினர் நேரடியாக பார்வையிட ஆன்லைன் கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: