இந்தியாவின் வலிமை இளைஞர்கள்தான்: மிகப்பெரிய சக்தியை மத்திய அரசு வீணாக்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: வேலையில்லா திண்டாட்டம் பற்றி பிரதமர் மோடி எதுவுமே பேசுவது இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; இந்தியாவின் அடையாளமாக சகோதரத்துவம் இருந்தது. அந்த அடையாளத்தை பிரதமர் அழித்துவிட்டார். பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக இந்தியா மாறிவிட்டது. ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை என கூறினார். மேலும் பேசிய அவர்; பிரதமர் மோடி 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால் கடந்த ஆண்டு ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்துவிட்டனர். பிரதமர் எங்கு சென்றாலும் குடியுரிமை சட்டம் குறித்து பேசுகிறாரே தவிர வேலையின்மை பிரச்சினை குறித்து பேசுவதில்லை. வேலைவாய்ப்பு குறித்தும், இந்தியாவின் தோற்றத்தைச் சிதைத்தது குறித்தும் இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினால், அவர்களுக்குத் துப்பாக்கி குண்டுகள் மூலம் பதில் அளிக்கிறார்கள். இந்தியாவின் வலிமை இளைஞர்கள்தான். மிகப்பெரிய சொத்தான இளைஞர்கள் சக்தியை மத்திய அரசு வீணாக்குகிறது.

இளைஞர்களின் குரல்களை அடக்க நடக்கும் முயற்சிகளில் பணிந்துவிடாமல், வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும். பொருளாதாரம் பற்றி மோடி படிக்கவும் இல்லை புரிந்துக்கொள்ளவும் இல்லை. ஜிஎஸ்டி என்றால் என்ன என்பது கூட மோடிக்கு புரியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நல்லதை விட தீங்கு விளைவிப்பதாக 8 வயது குழந்தை கூட சொல்லும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: