வலையை நிறைத்த சீலா, கட்டா: அதிகவிலை போனதால் பாம்பன் மீனவர்கள் குஷி

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய பாம்பன் மீனவர்களின் வலையில் சீலா, கட்டா மீன்கள் அதிகளவு சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சில நாட்களாக பலத்த காற்று வீசியதால் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். காற்றின் வேகம் சீரானதை தொடர்ந்து தடை விலகியதால் பாம்பன் தெற்குவாடி கடற்கரையிலிருந்து 100க்கும் மேற்ப்ட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.

இரவு முழுவதும் மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் நல்ல விலை போகக்கூடிய சீலா மீன்களும், கட்டா மீன்களும் அதிகளவில் சிக்கியது. தலா 20 கிலோ வரையிலான கட்டா மீன்களும் அதிகளவில் பிடிப்பட்ட நிலையில் நேற்று காலை மீனவர்கள் பாம்பன் கரை திரும்பினர். படகில் பிடித்துவரப்பட்ட மீன்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக தெற்குவாடி கடற்கரையில் அடுக்கி வைத்தனர். பிடிபட்ட அனைத்து மீன்களையும் வியாபாரிகள் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுத்து சென்றனர். நல்ல மீன்வரத்தும், அதிக லாபமும் கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: