காலிஸ்தான் தலைவர் ஹர்மீத் சிங் சுட்டுக்கொலை: 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்!

லாகூர்: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவர் ஹர்மீத் சிங், பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லாகூரில் உள்ள தேரா சாஹல் குருத்வாராவில் உள்ள கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் ஹர்மீத சிங் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபில் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில், ஹர்மீத் சிங் தேடப்பட்டு வந்தவர் ஆவார். 2018ம் ஆண்டு அமிர்தசரஸில் மத வழிபாட்டின்போது குண்டுவெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் இவர் தொடர்புடையவர் ஆவார்.

சர்வதேச போலீஸான இன்டர்போல், கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. முனைவர் பட்டம் பெற்றவரான ஹர்மீத் சிங், ஹாப்பி பி.எச்.டி என்று அழைக்கப்பட்டு வந்தார். காலிஸ்தான் விடுதலைப்படையின் ஹர்மிந்தர் மிண்டூ, 2018ம் ஆண்டு இறந்ததை தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஹர்மீத் சிங் ஆவார். 20 ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்த ஹர்மீத் சிங், லாகூரில் உள்ளூர் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: