×

2 ஆண்டுகளாக தொடர் கைவரிசை 100 பைக்குகளை பார்ட் பார்ட்டாக கழற்றி விற்று லட்சக்கணக்கில் பணம் குவிப்பு

* ஜெகஜால கில்லாடி ரயில்வே ஊழியர் உட்பட
* 3 பேர் அதிரடி கைது l சிசிடிவி பதிவில் சிக்கினான்

சென்னை: வேப்பேரி மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி வந்த ரயில்வே ஊழியர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பைக், ஸ்கூட்டர்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.சென்னை வேப்பேரி அருகே உள்ள டவுட்டன் பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து மாயமாகி வருவதாக பாதிக்கப்பட்டோர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வேப்பேரி போலீசார் குற்றவாளியை பிடிக்க பல வகையில் முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் டவுட்டன் பாலம் அருகே சிசிடிவி கேமரா பொருத்தி போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் சுற்றி வந்து டவுட்டன் பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சிசிடிவி பதிவு காட்சிகளில் உள்ள நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்து டவுட்டன் பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை திருடி செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து அவர் வைத்திருந்த பைக் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் கையில் வைத்திருந்தது திருட்டு பைக் என தெரியவந்தது. உடனே போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, ஆவடி பகுதியில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வரும் அம்பத்தூர் மேனாம்மேடு, இந்திரா நகரை சேர்ந்த மெக்கானிக் சாமுவேல் (51) என்று தெரியவந்தது.இவன் தனது நண்பர் திருமழிசை ராஜேஸ்வரி நகர் 7வது சாரதி தெருவை சேர்ந்த ரயில்வே ஊழியரான தமிழ்வாணன் (47) என்பவருடன் இணைந்து புரசைவாக்கம், சூளை மற்றும் டவுட்டன் பகுதிகளில் நிறுத்தப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை திருடி தனது கடைக்கு எடுத்து சென்று ஒரே இரவில் உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.ரயில்வேயில் 2வது ஷிப்ட் முடிந்து 10 மணிக்கு மேல் வீட்டிற்கு செல்லும் போது தமிழ்வாணன், டவுட்டன் பாலம் அருகே பைக் ஒன்றை திருடிக்கொண்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வே ஊழியர் தமிழ்வாணன் மற்றும் மெக்கானிக் சாமுவேல் 100க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி உதிரிபாகங்களாக விற்பனை செய்து பல லட்சம் சம்பாதித்தது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதுதவிர திருட்டு பைக்கை உடைக்கும் போது எதிலும் பயன்படாத உதிரிபாகங்களை ஆவடி அருகே உள்ள கள்ளிக்குப்பம் கங்கை நகர், 14 கக்கன்ஜி தெருவை சேர்ந்த பழைய இரும்பு கடை வியாபாரி சண்முகம் (50) என்பவர் உதவியுடன் விற்பனை செய்துள்ளனர். அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ரயில்வே ஊழியர் தமிழ்வாணன் மற்றும் மெக்கானிக் சாமுவேல் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த பழைய இரும்பு வியாபாரி சண்முகம் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் ஆவடியில் உள்ள பைக் பழுது நீக்கும் கடைக்கு அழைத்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 50க்கும் மேற்பட்ட திருடிய பைக்குகளின் பதிவு எண்கள் மட்டும் கடையின் ஒரு பகுதியில் குவித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அனைத்து வாகன பதிவு எண் பலகைகள் மற்றும் மெக்கானிக் கடை முன்பு திருட்டு பைக்குகளை நிறுத்தி வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னையில் ரயில்வே ஊழியர் ஒருவர் தனது நண்பர் மெக்கானிக்குடன் 100க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி, உதிரிபாகங்களை விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bart Bart , Serial handwriting , Bart, money
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்