அரசின் இலவச வேட்டி, சேலை கிடைக்காததால் தினமும் விஏஓ அலுவலகம், ரேஷன் கடைகளுக்கு அலையும் மக்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் இலவச வேட்டி, சேலை என்பது பெரும்பாலானோருக்கு கிடைக்காததால் அவர்கள் தினந்தோறும் விஏஓ அலுவலகத்திற்கும், ரேஷன் கடைகளுக்கும் அலையும் நிலை இருந்து வருகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டிலும் இதே போன்று பொங்கல் பரிசு பையுடன் ரூ ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் அப்பொழுது இந்த இலவச வேட்டி, சேலை கொடுக்காதது குறித்து சென்னை உட்பட பெரிய மாநகரங்களில் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதன்பின்னர் இந்த வேட்டி சேலை வழங்கும் பணியானது நடைபெற்றது.அதன்படி விஏஓ அலுவலகத்தில் இதற்கான டோக்கன் பெற்று அந்த டோக்கன் மூலம் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த வேட்டி சேலை வழங்கும் பணியானது நடைபெற்ற நிலையில் இதில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த வேட்டி சேலை வழங்கப்படாததால் நேற்று வரையில் பொதுமக்கள் வேட்டி, சேலையை பெறுவதற்காக விஏஓ அலுவலகத்திற்கும்,ரேஷன் கடைகளுக்கும் அலையும் நிலை இருந்து வருகிறது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 3லட்சத்து 63 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்காக 721 ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பணி நடைபெற்ற நிலையில் இதில் மூன்றில் ஒரு பங்கு குடும்ப அட்டைதாரர்கள் கூட வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. அதன்படி திருவாரூர் நகரில் 9 ரேஷன் கடைகளை உள்ளடக்கிய தெற்கு சேத்தி விஏஓ அலுவலகத்திற்கு மொத்தம் 9 ஆயிரம் வேட்டி, சேலைகள் தேவை என்ற நிலையில் வெறும் 2 ஆயிரத்து600 டோக்கன்கள் மட்டுமே கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக விஏஓ அபிராமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பர் தெரு, தர்ம கோவில் தெரு, கீழ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை கொடுக்கப்படாததால் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை இருந்து வருகிறது. இது குறித்து தாசில்தார் நக்கீரனிடம் கேட்டபோது ஆயிரம் கார்டுகளுக்கு 600 கார்டுகளுக்கு மட்டுமே வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பற்றாக்குறை இருந்து வருவதாக தெரிவித்தார். தாசில்தார் தெரிவிப்பது போல் ஆயிரம் குடும்ப அட்டைகளில் 600 பேருக்கு வழங்கப்படுவதாக எடுத்துக்கொண்டால் மேற்படி தெற்கு சேர்த்தி விஏஓ அலுவலகத்திற்கு 5 ஆயிரத்து 400 டோக்கன்கள் வழங்கப்பட வேண்டிய நிலையில் வெறும் 2 ஆயிரத்து 600 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே 30 முதல் 40 சதவீதம் மட்டுமே இந்த வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளதால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வேட்டி, சேலை கிடைக்காதவர்களுக்கு வேட்டி, சேலை வழஙக வேண்டுமென குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

ஜவுளி கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரசின் இலவச வேட்டி சேலைகள்: தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இந்த வேட்டி, சேலைகளை சிலர் தங்களுக்கு தேவைப்படாத பட்சத்தில் அதனை பாத்திர வியாபாரிகளிடம் கொடுத்து தங்களுக்கு தேவையான குடம் மற்றும் வாளி போன்ற பொருட்களை வாங்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஜவுளி கடைகளில் முன்பு இருந்தவாறு துணிப்பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த துணிப்பைகளை தயாரிப்பதற்கு அரசின் இலவச வேட்டி சேலைகள் பயன்படுவதால் குறைந்த விலையில் இந்த வேட்டி, சேலைகளை பெற்று துணி பைகள் தயாரிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலைகள் மொத்தமாக ஜவுளி கடைகளுக்கு சப்ளை செய்து இருக்கலாம் என்று கூறப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜவுளி கடைகள் மற்றும் அந்த ஜவுளி கடைகள் மூலம் தைக்கப்படும் டெய்லர் கடைகள் போன்றவற்றில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: