பட்டா வழங்காவிட்டால் தற்கொலைக்கு அனுமதி:சீலப்பாடியை சேர்ந்த 42 குடும்பங்கள் ஆவேசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த 42 குடும்பத்தினர் இடத்திற்கு பட்டா வழங்காவிட்டால் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் பரபரப்பு மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் ஒன்றியம், சீலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சீலப்பாடி விநாயகர் நகர் ஏ மற்றும் பி பிரிவு பட்டா 1148க்கு சர்வே எண்- 507க்கு கட்டுப்பட்ட ஏ.3.52 சென்ட்க்கு நிலத்தை 42 பேர் வாங்கியிருந்தோம். அந்த இடத்திற்கு பட்டா கேட்டு திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் எங்களுக்கு பட்டா தரவில்லை.

கேட்டால் இது அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இடம் என்று கூறினர். இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு போட்டு கேட்டபோது இந்த இடம் எங்களது அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்டதே இல்லை என்று பதில் அளித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதில் எண்- 255/2009, 12.2.2018 தீர்ப்பின் படி அரசு அப்ரூவல் பெறப்பட்டு கிரையம் பெறப்பட்ட 42 மனைதாரர்களுக்கு உட்பிரிவு பட்டா வழங்க கோரி தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் மேற்கு தாலுகா தாசில்தார் பட்டா தராமல் இழுத்தடித்து வருகிறார். அதனால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் 42 மனைதாரர்களும் குடும்பத்தோடு தற்கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: