பரனூர் சுங்கச்சாவடியில் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீசார்

காஞ்சிபுரம்:  பரனூர் சுங்கச்சாவடியில் வன்முறை நடந்தபோது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தற்போது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்தினால் கட்டணம் செலுத்தாமல் செல்வதை தடுக்கவே, வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்றது. அப்போது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக கட்டணம் வசூல் செய்பவருக்கும், அரசு பேருந்து ஓட்டுனருக்கும், இடையே  பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டநிலையில்  சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பஸ் ஓட்டுனருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த  பயணிகள் பெரும்பாலானோர் சுங்கச்சாவடியை அடித்துநொறுக்கினர். இதனையடுத்து,  தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின் போது ரூ.18 லட்சம் காணவில்லை என பரனூர் சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் அளித்துள்ளார்.  

அவர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அரசு பேருந்து ஊழியர்கள்-சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியில் நடந்த மோதலை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிசூடு தடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : sky ,clash ,Clash of Control , Paranur, Customs, Conflict, Gun, Police
× RELATED ஸ்கை ட்ரீ