×

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பேரறிவாளன் கடிதம்: கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: சிறைத்தண்டனையை ரத்து செய்வதற்கான கருணை மனு மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். சட்டப்பிரிவு 161ன் கீழ் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, தாம் கருணை மனு அளித்ததாகவும் தற்போது ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். தனது கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதையும் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வழக்கில் உள்ள முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் கேட்டுக்கொண்டுள்ளார். தமது வாக்கமூலத்தை பதிவு செய்யவில்லை என்று முன்னாள் சிபிஐ கண்காணிப்பாளர் தியாகராஜன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்தும் பேரறிவாளன் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ் காந்தி கொலையில் பேட்டரி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ நிரூபிக்கவில்லை என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Panwarila ,Perarivalan , Rajiv Gandhi assassination, terrorist, Governor Panwarlal, mercy petition
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!