×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவலை பிப். 11ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்  கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களது காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமாக பதிவிறக்கம் செய்து வெளியிட்டதாக கூறி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக திருநாவுக்கரசு சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சமீபத்தில் அந்த குண்டர் தடுப்பு சட்டமானது நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அவர்கள் மீது அடிதடி வழக்கும் தொடரப்பட்டது.

ஆரம்பம் முதலே இந்த வழக்கினை பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். அதன் பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் கோவை நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆதலால் அந்த வழக்கினை கைவிடுகிறோம். ஆனால் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச வீடியோ தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போதெல்லாம்  ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு வந்தது.

இவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் அவர்கள் நீதிமன்றத்தில் காட்சியளிக்கப்பட்டனர். அப்போது தலைமை குற்றவியல் நீதிபதி ரவி, குற்றவாளிகளின் காவலை நாளை வரை நீட்டிப்பதாக உத்தரவிட்டார். மேலும் இவர்கள் 5 பேரையும் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது குற்றவாளிகள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி ரவி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி வழக்கினை ஒத்திவைத்துள்ளார். மேலும் இந்த வழக்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Pollachi ,Coimbatore , Pollachi Sexual Assault, Police, 5 People, Feb 11, Coimbatore Court
× RELATED கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கர்நாடக எல்லையை திறக்க கோர்ட் உத்தரவு