நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி: முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

நாமக்கல்: நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணை தலைவரும் இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த 298 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை,  தமிழகத்தில் சமீப காலங்களில் பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்குகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரமும், காப்புரிமையும் பெற்றுத்தர தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய மயில்சாமி, சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுள் காலம் முடிவதற்குள் சந்திரயான் 3 அனுப்ப வேண்டும்.

அதற்கான ஆராய்ச்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்வது உலக நாடுகளிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இஸ்ரோவும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அதனுடைய ஆயுட்காலம் குறைவு என்பதால் நிலவிலேயே ஒரு சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமையும் போது, இந்தியாவும் அதில் பங்குகொள்ளும். அதன் முதல்கட்டமாகதான் ககன்யான் அனுப்பப்பட உள்ளது என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இனி வரும் காலங்களில் செல்போன் டவர்கள் இல்லாத இடத்திலும் கூட செயற்கைகோள் தொழில்நுட்பத்துடன் தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Related Stories: