CAA-க்கு எதிராக போராட்டத்தை தூண்டுங்க: இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி டெபாசிட்....உள்துறையிடம் அமலாக்கத்துறை தகவல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த பல அமைப்புகளுக்கு பண செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இரு அவைகளிலும் பெரும்பான்மை  ஆதரவுடன் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து  போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனாலும், சட்டம் இயற்றியதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என பாஜக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கிடையே, கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் சிஏஏ.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இதுபோன்ற தீர்மானங்களால் பயனில்லை என்றும், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அம்மாநில கவர்னர் ஆரிப்  முகமது கான் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் சிஏஏ.க்கு எதிரான தீர்மானம் நேற்று மாநில  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதற்காக கேரளாவை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில தனிநபர் வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய்  பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற கடந்த டிசம்பர் (2019) 4-ம் தேதி முதல் ஜனவரி (2020) 6-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த பணப்பரிவர்த்தனை நடத்திருப்பதால் சந்தேசகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 கோடியை 4 லட்சம் ரூபாய் 73 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு 2000 ரூபாய் முதல் 5000 வரை தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: