×

பரவும் கொரோனா வைரஸ்..: சீனாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், வுஹான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, நேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளதால், அதனை தடுப்பது மற்றும் எதிர்கொள்வது குறித்து கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வுஹான் நகரில் சிக்கியுள்ள 250க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர சீனாவிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதற்கான பணியை வெளியுறவு அமைச்சகம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்தியர்களை அழைத்து வர வுஹான் நகரில் இருந்து மும்பைக்கு போயிங் 747 விமானத்தை இயக்க ஏர் இந்தியா தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீன அரசு, வுஹான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு விமானம் இயக்கப்படும்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா அதிகாரிகள், நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். விமான ஊழியர்கள், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர். வுஹான் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள், எப்படி விமான நிலையத்திற்கு வருவார்கள் என்ற சிக்கல் உள்ளது. இந்திய தூதரகத்தின் உதவியுடன் இதற்கான தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, அனுமதி கிடைத்தவுடன், விமானம் இயக்கப்படும், என்று கூறியுள்ளனர்.


Tags : Air Force ,Indian ,China Special Air India ,Indians ,Wuhan , Corona Virus, China, Indian Students, Special Flight, Air India
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...