அட்னான் சமிக்கு, பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு: சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன்?...பாஜக கேள்வி

டெல்லி: பியானோ வாத்தியக் கலைஞர் அட்னான் சமிக்கு, பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு, பத்மஸ்ரீ விருதுக்கு, 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அட்னான் சமியும் ஒருவர். இந்நிலையில், ராஜ் தாக்கரேவின், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் திரைப்படப் பிரிவு தலைவர் அமே கோப்கர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அட்னான் சமி, பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவர். கடந்த, 2016ல் தான், அவர், இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவது, அந்த விருதுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானம். மத்திய அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும், என, அமே கோப்கர் கூறியிருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், அட்னான் சமி, சிறந்த இசைக் கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. எனினும், பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்குவதை ஏற்க முடியாது, என்றார். தேசியவாத காங்., பிரமுகரும், மஹாராஷ்டிரா சிறுபான்மையினர் மேம்பாட்டு அமைச்சருமான நவாப் மாலிக், தன், டுவிட்டர் பதிவில், 2016ல் இந்திய குடியுரிமை பெற்ற அட்னான் சமிக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி, 130 கோடி இந்தியர்களை அரசு அவமானப்படுத்தி உள்ளது. அத்துடன், பாகிஸ்தானைச் சேர்ந்த எவரும், ஜெய் மோடி என கோஷமிட்டால், அவருக்கு இந்திய குடியுரிமை; அதை தொடர்ந்து, பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, எதிர்க்கட்சியினர், பிரதமர் மோடியை எதிர்க்கும் முஸ்லிம்களை மட்டுமே விரும்புகின்றனர். பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அட்னான் சமியின் தந்தை, பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றியவர் என்பதால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குறை கூறுகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தந்தைக்கு, இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி மற்றும் ஜெர்மனியின் ஹிட்லருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன் என கேட்கிறேன். இந்த விருதுக்கு அட்னான் சமி தகுதியானவர் என்பதால் தான், அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சம்பித் பாத்ரா தெரிவித்தார்.

Related Stories: