துரோகிகளை சுட்டு தள்ளுவோம்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம் என பிரசாரத்தில் கோஷம் எழுப்பும்படி கட்சி ஆதரவாளர்களிடம் பாஜ தலைவரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கூறியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ரித்தாலா தொகுதி வேட்பாளர் மணீஷ் சவுத்ரியை ஆதரித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசியவாதம் குறித்து அவர் உணர்ச்சிவசமாக பேசியதோடு, ஷாகீன்பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களை சரமாரியாக தாக்கி பேசினார். மேலும் போராட்ட களத்தில் தேச விரோத கோஷங்கள் முழங்கப்படுவதாகவும் கூறிய அவர், தனது பிரசாரத்தை காண குவிந்த ஆதரவாளர்களை நோக்கி, ‘‘தேச துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம்’’ என்றார், உடனே அங்கிருந்தவர்கள், ‘‘துப்பாக்கி தோட்டாவால் சுட்டுத்தள்ளுவோம்’’ என கோரசாக கோஷமிட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த கபில் மிஸ்ரா உள்பட வேறு சில பாஜ தலைவர்களும் அனுராக் தாக்கூர் போலவே, கோஷம் போட, கூட்டமும், அதேபோல திருப்பிக் கூறியது. அதையடுத்து தாக்கூர் மேலும் கூறுகையில், ‘‘இந்துத்வா தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் காதில் விழும் அளவுக்கு இந்த கோஷத்தை ஓங்கி முழங்கும்படி’’ ஆதரவாளர்களை தூண்டினார். மத்திய அமைச்சரின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சு, டெல்லி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சு நேற்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் கீர்த்தி ஆசாத் கூறுகையில், ‘‘அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்கும் அந்த தலைவர்கள் தான் உண்மையான துரோகிகள்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Tags : Union minister ,speech , Traitor, shoot, Union minister, controversy, speech
× RELATED மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிய...