என்டிஎப்பி, ஏபிஎஸ்யூ உடன் போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு ஒப்பந்தம்: அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து

புதுடெல்லி: போடோலாந்து தனி மாநிலம் கோரும் விவகாரத்தில், தேசிய ஜனநாயக முன்னணி அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நேற்று இந்த ஒப்பந்தம்  கையெழுத்தானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அசாமில், போடோலாந்து தனி மாநிலம் கோரி, தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) அமைப்பு போராடி வருகிறது. அதேபோல, அனைத்து போடோ மாணவர் கூட்டமைப்பு (ஏ.பி.எஸ்.யூ.) உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், போடோலாந்து  பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இதற்கான தொடர் போராட்டங்களை நடத்தி வரும் என்.டி.எப்.பி., ஏ.பி.எஸ்.யூ உடன் மத்திய அரசு நேற்று முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கான ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா முன்னிலையில் கையெழுத்தானது. இது அசாமின் அரசியல், பொருளாதார வளத்துக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில், என்டிஎப்பி., ஏபிஎஸ்யூ., ஆகிய அமைப்புகளின் தலைவர்களும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சத்யேந்திர கார்க், அசாம் மாநில அரசு தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், ``இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம். இதன் மூலம் போடோலாந்து பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்படும்’’ என்று தெரிவித்தார்.

* முழுமையான தீர்வு எட்டப்படும்
இந்த முத்தரப்பு ஒப்பந்தம் குறித்து அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ``போடோ அமைதி ஒப்பந்தத்திற்கு முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான அரசும், ஹக்ரமா மொகிலரி தலைமையிலான போடோலாந்து பிராந்திய சபையும் முழு ஆதரவு அளிக்கும். இந்த ஒப்பந்தம் அசாமின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அதே நேரம், போடோலாந்தின் அமைதி, முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது. இதன் மூலம் போடோலாந்து பிரச்னைக்கு முழுமையான, இறுதியான தீர்வு எட்டப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Tags : NTSP ,ABSU ,Resolve Bodoland Problem: Signing Amit Shah Three ,Bodoland ,NDFP , NTFP, ABSU, Bodoland issue, Tripartite, Agreement, Amit Shah, Leadership, Signature
× RELATED காவேரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண்...