×

விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு: இடைத்தரகர்களுக்கு 5 லட்சம் கொடுத்து தேர்வு எழுதிய 3 பேர் கைது

* தமிழகம் முழுவதும்   நெட்வொர்க் அம்பலம்
* மோசடியில் ஈடுபட்ட  2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
* உயரதிகாரிகளை  காப்பாற்ற ‘பகீரத’ முயற்சி

சென்னை: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இடைத்தரகர்களுக்கு 5 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளியான மாஸ்டர் மைண்ட்  என்று அழைக்கப்படும் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான 2 பேரை பள்ளி கல்வி இயக்ககம் சஸ்பெண்ட் செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு  நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் விஐபி தரகர்கள் மற்றும் உயரதிகாரிகள்  ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம்  திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை ேசர்ந்த ராஜசேகர் (26),  ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45) என மொத்தம் 9 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள்  தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் பல ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது. இதில் அரசியல்வாதிகள், விவிஐபி புரோக்கர்கள், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலருக்கும் தொடர்பு  இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலின் மாஸ்டர் மைண்ட் மற்றும் தலைவனாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் செயல்பட்டு உள்ளார்.

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து இந்த மோசடியை அவர் திறமையாக செய்து முடித்துள்ளார். இந்நிலையில், குரூப்4 தேர்வில் நடந்த முறைகேட்டில் ஜெயக்குமாரின் கையாளாக செயல்பட்ட  ஓம் காந்தன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்ககத்தில் ரெக்கார்ட் கிளார்க்காக பணிபுரிந்தவர். 2016ம் ஆண்டு முதல் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை  வேனில் கொண்டு வருவார். இந்நிலையில்
இந்த மோசடி கும்பலுக்கு திட்டம் வகுத்து கொடுத்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று  காலை ஜெயக்குமாரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயரதிகாரிகள் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடியை அலுவலக உதவியாளர்கள் உதவியுடன் செய்து இருக்க முடியாது.

எனவே, இந்த மோசடி பின்னணியில் டிஎஸ்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வி இயக்கக அதிகாரிகள் பலர் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக பிடிபட்ட ஜெயக்குமார் வாக்குமூலம் அளித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால்  உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜெயக்குமாரை கைது செய்ததை வெளியில் அறிவிக்காமல் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள திருவல்லிக்கேனியை சேர்ந்த ரமேஷ் (39), பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் செயல்பட்டு வரும், தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் நிர்ணய கமிட்டியில் பணியாற்றியவர். அதே வளாகத்தில் செயல்பட்டு  வரும் எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆகிய இருவரையும் பள்ளி கல்வித்துறை இயக்ககம் நேற்று காலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. குருப் 4 முறைகேட்டில் இதுவரை  கீழ் நிலை ஊழியர்கள் மட்டும்தான் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யாரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வில்லை. எனவே உயர் அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் ரகசிய முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது  தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் குருப்-4 தேர்வு முறைகேட்டிற்கு யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது. அந்த நபர்கள் யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் தகவல்  அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் படி ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34),  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33) ஆகியோர் இடைத்தரகர்களுக்கு தலா ₹5 லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக மூன்று பேரையும் ேநற்று கைது ெசய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டத்திற்கு இடைத்தரகராக தேர்வு எழுதிய சீனுவாசன் செயல்பட்டு வந்துள்ளார். அவர்  4 பேரிடம் தலா ₹5 லட்சம் பணம் பெற்று அவர்களையும் முறைகேடாக தேர்வு எழுத உதவி செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தேர்வு எழுதிய நபர்களில் நம்பிக்கையான நபர்களை அந்த மாவட்ட இடைத்தரகர்களாக நியமித்து  பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தற்போது விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மேலும் கைது செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி  உள்ளது. இதுவரை இந்த மோசடி வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Group 4 , Group 4 selection abuse. Intermediaries, 3 arrested
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...