அரசு வாக்குறுதிகளின் உண்மை நிலை 3.64 கோடி பேருக்கு ஐந்தாண்டுகளில் வேலையில்லை: பிரியங்கா கடும் கண்டனம்

புதுடெல்லி: `‘கடந்த ஐந்து ஆண்டுகளில், 7 முக்கிய துறைகளில் 3.64 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. இதுவே, மக்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளின் உண்மை நிலை’’ என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் அவ்வபோது கருத்துகள் பதிவிடுவதை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பதிவில், ``கடந்த 5 ஆண்டுகளில், நாட்டிலுள்ள முக்கியமான 7 துறைகளில், ஏறக்குறைய 3.64 கோடி பேருக்கு வேலை வாய்ப்பில்லை. வேலை வாய்ப்பு அளிப்பதாக அரசு அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலை இதுதான். இதனால் தான், வேலை வாய்ப்பு பற்றி பேசவே அரசு வெட்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, குடியரசு தினத்தன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `‘வேலை வாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்களின் கனவை எப்படி நனவாக்குவீர்கள்? இந்த சூழலில், நாடு எப்படி வலுவான குடியரசாகும்?’’ என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார். அதே போல, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், `‘வேலையின்மை பிரச்னையில் இருந்து இளைஞர்களை திசை திருப்ப, ஆர்எஸ்எஸ். அமைப்பு அவர்களை மத நடவடிக்கையில் ஈடுபடுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடிமக்கள் பதிவேடுக்கு பதிலாக, நாட்டில் எத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர் என்று கணக்கெடுக்க வேண்டும்’’ என்று கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: