90 சதவீத மக்களின் உணவு பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம்: மம்தா பெருமை

கொல்கத்தா: அனைவருக்கும் உணவு திட்டத்தின் மூலம் மேற்கு வங்க மக்களில் 90 சதவீதத்தினரின் உணவு பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தி உள்ளது என்று இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் உணவு திட்டத்தை (காட்யா சதி) முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 7 கோடி பேருக்கு, அதாவது 90 சதவீத மக்களுக்கு அரிசி, கோதுமை கிலோவுக்கு தலா ரூ.2 வீதம் கிடைக்கிறது. மேலும், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சந்தை விலையில் இருந்து பாதி விலைக்கு இவை கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்று அனைவருக்கும் உணவு திட்ட நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி முதல்வர் மம்தா தனது டிவிட்டரில், ``மாநிலத்தில் கிலோ அரிசி ரூ.2க்கு கிடைப்பதன் மூலம் 90 சதவீத மக்களின் உணவு பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தி உள்ளது. சிங்கூர் விவசாயிகள் தவிர ஜங்கல்மகால், தோடோ பழங்குடியினர், தேயிலைத் தொழிலாளர்கள், அய்லா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு சிறப்பு உதவி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: