×

சீனாவில் 81 பேர் இறந்த நிலையில் இந்தியாவில் உஷார் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்: கேரளா உட்பட 4 மாநிலங்களில் 4 பேர் பாதிப்பு : தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 81 பேர் இறந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றன. இந்நிலையில், கேரளா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 4 பேருக்கும், ெகால்கத்தாவில் சீன பெண் பயணி ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, தனி வார்டில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் சமீபத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடல் உணவு, வனவிலங்கு சந்தையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வைரஸ் சீனாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை 80 ஆக இருந்தது. இந்நிலையில்  பீஜிங்கில் ஒருவர் உயிரிழந் ததை அடுத்து 81ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் உயர்ந்து 2,744 ஆகியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் கேரளாவை  சேர்ந்த ஒருவர், பீகாரை சேர்ந்த இளம்பெண், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆண் என 4 பேருக்கும், கொல்கத்தாவுக்கு சுற்றுலா வந்த சீன பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள்  இருப்பதாக கண்டறியப்பட்டு, தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சீனா சென்று வந்த ஐதராபாத்தை சேர்ந்த 3 பேரை பரிசோதித்ததில், அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், `அவர்கள் வீட்டை விட்டு வெளிய செல்ல வேண்டாம்’ என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, சீனாவில் இருந்து நேபாளம் திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து  மற்றொருவருக்கு பரவக்கூடிய வைரஸ் என்பதால், நேபாள எல்லையில் இருந்து  வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக நேபாள  எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் இருந்து தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவ  ஆரம்பித்துள்ளது. தாய்லாந்தில் 7 பேரும், ஜப்பானில் 3, தென் கொரியாவில் 3,  அமெரிக்காவில் 3, வியட்நாமில் 2, சிங்கப்பூரில் 4, மலேசியாவில் 3,  நேபாளத்தில் 1, பிரான்சில் 3, ஆஸ்திரேலியாவில் 4 பேர், கம்போடியாவில் 1 என வெளிநாடுகளில்  மொத்தம் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களுடைய குடிமக்களை திருப்பி அழைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதிய  கடிதத்தில், வுகான் உள்ளிட்ட நகரங்களில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை  மீட்டு தாய்நாடு அழைத்து வர சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு செய்யும்படி  கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் கண்காணித்து வருகிறது. மேலும், அமைச்சரவை செயலரும் எடுக்க வேண்டிய தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த ஏறக்குறைய 23,000 மாணவர்கள் வுகான் உள்ளிட்ட சீன நகரங்களில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன புத்தாண்டு விடுமுறையையொட்டி தாய்நாடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை இந்தியா அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது.

இதற்காக சீன அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சீனா அனுமதி அளித்ததும், உடனடியாக மாணவர்களை மீட்டு வருவதற்காக டெல்லியில் தயார் நிலையில் போயிங் விமானங்கள் வைக்கப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `வுகானில் உள்ள இந்திய தூதரகத்துடன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், வசதிகள் தூதரகம் மூலம் அளிக்கப்படுகிறது. சீன தூதரக அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர்களை தாய்நாடு அழைத்து வர போயிங் 747 விமானம் தயாராக உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால், சீனாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 6 பேர்
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை  இயக்குநர் ரமேஷ்குமார் கூறியதாவது:  கோவை  நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த  இரண்டு பேர் என 6 பேர் மற்றும்  திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் சீனா சென்று கோவை விமான நிலையம் வந்தனர். இவர்கள்,  பணிக்காவும், சுற்றுலாவுக்காகவும் சென்றவர்கள். கொரோனா வைரஸ் பீதியை  அடுத்து ஊர் திரும்பியுள்ளனர். இதில், சென்னை, திண்டுக்கல் பகுதியை  சேர்ந்தவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணித்து வருகின்றனர். கோவை நகர்  மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை எங்கள் டாக்டர்கள் குழுவினர்  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது வரை அவர்களுக்கு எந்தவிதமான  பாதிப்பும் இல்லை. தினமும் அவர்களின் உடல்நிலை குறித்து கண்டறியப்பட்டு  வருகிறது. அவர்களை பொது இடங்களுக்கு செல்ல கூடாது. திருமணம் உள்ளிட்ட  நிகழ்ச்சிக்கு செல்ல கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல்  பாதிப்புகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் சீனாவில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, அவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர். இதுவரை கேரளாவைச் சேர்ந்த 288 பேர் சீனாவில் இருந்து திரும்பியுள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 72 பேரும் எர்ணாகுளம் மாவட்டத்தில் 54 பேரும் திரும்பி வந்துள்ளனர். இதுபோல் கண்ணூர் மாவட்டம் பேராவூரை சேர்ந்த 12 பேர் நேற்று முன்தினம் ஊர் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல், சீனாவில் இருந்து கர்நாடக மாநிலம் திரும்பியுள்ள 2,572 பேரிடம் கொரோனா வரைஸ் பரிசோதனை நடந்துள்ளது.

கடந்த 21ம் தேதி முதல் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தினந்தோறும் 300 முதல் 400 பேரை பரிசோதனை நடத்தி வருகிறோம் என்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல், சீனாவில் இருந்து திரும்பியவர்களில், மகாராஷ்டிராவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடமும், ராஜஸ்தானில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர மகாராஷ்டிராவில் இதுவரை சுமார் 3500 பேரிடமும், ராஜஸ்தானில் 200க்கும் மேற்பட்டவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

* கேரள அரசு கடிதம்
கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட கேரளாவைச் ேசர்ந்தவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கேரள தலைமை செயலாளர் ேடாம் ஜோஸ் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து ேகரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் சீனாவில் இருந்து கேரளா வந்துள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* மத்திய குழு ஆய்வு:
மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி ேலடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியைச் சோர்ந்த டாக்டர் புஷ்பபேந்திரகுமார் வர்மா, உட்பட 4 பேர் கொண்ட குழு நேற்று கொச்சி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். கொச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

* கொரோனா வைரஸ் பாதிப்பு
நோவெல் கொரோனா வைரஸ் (என்கோவ்) மிகப்பெரிய வைரஸ் குடும்பமாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டால் முதலில் சாதாரண காய்ச்சலில் இருந்து பின்னர் மூச்சுவிடுவதில் சிரமம் வரையிலான அறிகுறிகள் ஏற்படும். இந்த வைரசால் சீனாவில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை,
    
* ஜனவரி 26ம் தேதி வரையில், இந்தியாவில் சீனாவில் இருந்து வந்த 137 விமானங்களில் வந்த 29,707 பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* கேரளா:
சீனாவில் இருந்து திரும்பியவர்களில், கேரளாவின் திருச்சூர், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் தலா ஒருவரும், எர்ணாகுளத்தில் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதால், அவர்கள் தனி இடத்தில் வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகின்றனர்.

* விமான நிலையங்களில் உடல்வெப்பநிலை ஆய்வு கருவிகள் பொருத்தம்

* சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமனம்
1. ஜல்காட்
2. உத்தரகாண்ட்
3. ஜல்ஜிபி
4. உத்தரகாண்ட்
5. பானிடாங்கி
6. மேற்குவங்கம்
7. நேபாளம்
8. டெல்லி
9. கொல்கத்தா
10. மகாராஷ்டிரா
11. ஐதராபாத்
12. பெங்களூரு
13. சென்னை
14. கொச்சி
15. கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 100க்கும்  மேற்பட்டவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Ushar ,China ,persons ,India ,state ,Kerala 4 ,states ,Corona , China, India, Coronavirus, Kerala
× RELATED புதுச்சேரியில் கொரோனா வைரசால்...