குற்ற சம்பவம் எங்கு நடந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்: கேரள டிஜிபி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் எந்த இடத்தில் குற்ற சம்பவம் நடந்தாலும் எந்த போலீஸ் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யலாம் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டுள்ளார். பொதுவாக போலீஸ் நிலையங்களில் எல்லை பிரச்னை வருவதுண்டு. ஏதாவது ஓர் இடத்தில் கொலை நடந்தாலோ அல்லது மர்மச்சாவு நடந்தாலோ அது தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி பிரச்னை நடந்த பல சம்பவங்கள் உண்டு. ஆனால் கிரிமினல் சட்டம் 170ன் படி போலீசார் நேரடியாக வழக்குப் பதிவு செய்ய முடியும். குற்றங்கள் குறித்து தகவல் தெரிந்தால் அந்த போலீஸ் அதிகாரி எந்த காவல் நிலைய எல்லையில் நடந்திருந்தாலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்த அதிகாரிக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

ஆனால், இந்த விவரம் பல போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. தெரிந்த அதிகாரிகளும் பொதுமக்களுக்கு இது தெரியாது என்பதால் அதை மறைத்துவிட்டு தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி தப்பித்து கொள்கின்றனர். இந்நிலையில் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், குற்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது தொடர்பாக எந்த போலீஸ் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அதை அனுப்பி வைக்கலாம். இதில் அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி ரயில்களிலோ பஸ் பயணத்தின் இடையிலோ ஏதாவது குற்றச் சம்பவம் நடந்தால் பாதிக்கப்பட்டவர் எங்கு இறங்குகிறாரா அந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம். அதே போலீஸ் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.


Tags : FIR ,police station ,crime , Crime, Police Station, FIR Registration, Kerala DGP, Warrant
× RELATED ராஜிவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும்...