×

கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரையில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடிக்கு மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி; கடந்த 2014ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரையிலான 5 நிதியாண்டுகளில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சமீபத்தில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது. இதேபோல் குஜராத் மற்றும் கர்நாடக கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் கடந்த 5 நிதியாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:
கடந்த 2014-15ம் நிதியாண்டு தொடங்கி கடந்த 2018-19ம் நிதியாண்டு வரையிலான 5 நிதியாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 972 முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் மூலம் ரூ.220 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 181 மோசடி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ரூ.127.7 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2017-18ம் நிதியாண்டில் 99 மோசடி குற்றச்சாட்டுகள் மூலம் ரூ.46.9 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.9.3 கோடி மோசடி நடைபெற்றுள்ளன. அப்போது 27 புகார்கள் பதிவாகின. இதேபோல் கடந்த 2015-16ல் 187 மோசடிகள் மூலம் ரூ.17.3 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டில் 478 மோசடிகள் மூலம் 19.8 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் எத்தனை முறைகேடு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : banks ,RBI , From 2014 to 2019, Urban Co-operative Bank, Rs.
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு