டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி வங்கி ஊழியர்கள் வருகிற 31, பிப்.1ல் வேலை நிறுத்தம்

* இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் பங்கேற்பு

* மத்திய பட்ஜெட் தாக்கல் அன்றும் ஸ்டிரைக்

சென்னை: டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்டப்படி வருகிற 31 மற்றும் பிப்ரவரி 1ம் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட் தாக்கல் நடைபெறும் அன்றும் ஸ்டிரைக் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து டெல்லியில் மத்திய அரசின் தொழிலாளர்  நலத்துறை முதன்மை ஆணையர் தலைமையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நிதி  அமைச்சக அதிகாரிகள், இந்திய வங்கியின் அசோசியேஷன் நிர்வாக தரப்பினர்,  தொழிற்சங்கத்தின் தரப்பிலும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் அளித்த பேட்டி: வங்கி துறையில் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒப்பந்தம் அக்டோபர் 17ல்  முடிந்து, நவம்பர் 2017ல் இருந்து புதிய ஒப்பந்தம் தொடங்கி இருக்க  வேண்டும்.   ஆனால், 30 மாதத்துக்கு பிறகும் 12.25 சதவீதம் சம்பளம் உயர்வுதான் அளிக்க  முன்வந்தனர். கடந்த முறை பேச்சுவார்த்தையில் 15 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அளித்தார்கள். எனவே, தற்போது விலைவாசி உயர்வு, வேலைப்பளு  இவற்றை கவனத்தில் கொண்டு அதை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கேட்டும் வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து வருகிறது.  

இதையடுத்து வருகிற 31, பிப்ரவரி 1ம் தேதி, மார்ச்  11, 12, 13 மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று  அறிவித்திருந்தோம். இந்த நிலையில்தான் இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடந்தது. அதில் “வேலை நிறுத்தத்தை  கைவிடுங்கள் பார்க்கலாம்” என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்தவித நல்ல  முடிவும் ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி வங்கி ஊழியர்கள் வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  இதில் இந்தியா முழுவதும் 10  லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனை உணர்ந்து  பொதுமக்கள் எங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசின் பட்ஜெட் வருகிற 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: