×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தைரியம் இருக்கிறதா? விக்கிரமராஜா இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும் தேசிய முதன்மை துணை தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா-சுகந்தா தம்பதியினரின் மூத்த மகனும் சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஞானமணி லூயிஸ்-புஷ்பகனி லூயிஸ் தம்பதியின் மகள் ஜெ.ஜி.ஹெலன் சத்யா ஆகியோரின் திருமணம்  சென்னை மயிலாப்பூர், கதீட்ரல் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று நடந்தது. தொடர்ந்து வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போட வேண்டும். கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து, பட்ஜெட் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கலந்து பேசுவாார். வரி போடலாமா-குறைக்கலாமா என்று யோசித்து, அதன்பிறகுதான் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை கலைஞர் சமர்ப்பிப்பார் என்பது வரலாறு.  ஆனால், இப்போது இருக்கும் இந்த ஆட்சி அந்த முறையைக் கையாள்கிறதா, கிடையாது. அதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. ‘‘வியாபாரம்’’ செய்வதற்காகவே ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வியாபாரம் என்றால் நியாயமான வியாபாரம் இல்லை. கொள்ளையடிக்கிற, கமிஷன் வாங்குகிற, லஞ்சம் வாங்குகிற வியாபாரம்.
தயாநிதி மாறன் பேசும்போது மணமக்களுக்கு அறிவுரை கூறினார். மணமகன் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது என்னுடைய அனுபவம். அதேநேரத்தில் மணமகளையும் அமைதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முதல்வர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடப்போகிறோம் என்று சொல்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இருந்து வருகிறது. இந்த லட்சணத்தில் ‘‘நான் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்,  விருதுகள் எல்லாம் வாங்கி கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் எடப்பாடி. விருது தந்தவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். நம்முடைய உரிமையை தட்டிப் பறிக்கக் கூடிய நிலை. உரிமை பறிபோய் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை இல்லை.  ஏற்கனவே சட்டமன்றத்தைக் கூட்டியபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஒரு தனிநபர் தீர்மானத்தை எழுதிக் கொடுத்தேன். 5 நாட்கள் சட்டமன்றம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கேட்டபோது சபாநாயகர் ஆய்வில் இருப்பதாக கூறி, எடுத்துக் கொள்ளவே இல்லை. இப்போதும் கேட்கிறேன். நீங்கள் ஆதரித்து ஓட்டு போட்டீர்கள். அதிமுகவின் 11 எம்பிக்கள், பாமகவின் ஒரு எம்பியையும்  சேர்த்து 12 எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டீர்கள்.

அதனால்தான் இந்த சட்டமே நிறைவேறியது. இப்போது நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால், தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவை கூடிக் கலந்து பேசி தீர்மானம் போடவேண்டும். நீங்கள் எவ்வளவு தான் அயோக்கியத்தனம், கொள்ளை, கொலை, ஊழல் செய்திருந்தாலும்- இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், நானே மனமுவந்து உங்களைப் பாராட்ட தயாராக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவும் தயாராக இருக்கிறேன். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா, போடமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.  இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மத்திய சென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன்,  மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு,  சுப.வீரபாண்டியன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தாயகம் கவி, வணிகர் சங்க  பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, சென்னை  மண்டல தலைவர் ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, பாண்டியராஜன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக மகளிரணி செயலாளர்  கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய ஜனநாயக கட்சி  பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள், வணிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags : legislature ,MK Stalin ,speech ,Vikramarajah ,wedding ceremony , Citizenship Amendment Act, Wickramarajah, Home Marriage Festival, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...