அண்ணா நினைவுநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.3ல் அமைதிப் பேரணி: திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

சென்னை: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம்தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் திரளாக பங்கேற்க திமுக மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து, சென்னை மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சி தந்த காவியத் தலைவர், தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா. அவரது 51வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் திமுக முன்னணியினர் வரும் 3ம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

 இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் அண்ணாவின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.Tags : Brother MK Stalin ,peace march ,Memorial ,District Secretaries ,Peaceful Rally ,Mass , Anna Memorial Day, MK Stalin's leadership
× RELATED அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி