10ம் வகுப்பு பழைய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள் இல்லாததால் குழப்பம்: தேர்ச்சி அச்சத்தில் மாணவர்கள்

சென்னை: பழைய பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வை பழைய பாடத்திட்டத்தில் பெயிலான மாணவர்கள்  மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கும் 10ம் வகுப்பு தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என்று கடந்த 3ம் தேதி  அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இதன்பேரில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.  இந்நிலையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவார்கள். பழைய பாடத்திட்டத்தில் படித்து தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தற்போது இறுதி வாய்ப்பாக அதே பழை பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்று தேர்வு அறிவித்துள்ள நிலையில் பல மாணவர்கள் ஒன்றிரண்டு பாடங்களை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதால், கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்று பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கு தெரியவில்லை. புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாதிரி கேள்வித்தாளை தேர்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. ஆனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு மாதிரி கேள்வித்தாள் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அந்த மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவர்களின்  குழப்பம் போக்க பழைய பாடத்திட்டத்தில் மாதிரி கேள்வித்தாளை தேர்வுத்துறை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: