மைசூரில் மோசமான வானிலை விமானத்தில் தவித்த ரஜினி: சக பயணிகளும் அவதி

சென்னை: மைசூரில் மோசமான வானிலை காரணமாக ரஜினி, அவரது மகள் சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டது. இதனால் விமானத்திற்குள்ளேயே ரஜினி ஒன்றரை மணிநேரம் இருந்தார்.  நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி, ரஜினியின் தர்பார் படம் திரைக்கு வந்தது. அந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்க கடந்த 8ம் தேதி ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி.  இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்துக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ரஜினிகாந்த், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்க மாட்டேன்’ என்று அறிவித்தார். இதனால் பரபரப்பு அதிகமானது.

இந்நிலையில், புதிய படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ள கடந்த 23ம் தேதி ரஜினி, ஐதராபாத் செல்வதாக இருந்தது. ஆனால் தாமதமானது. இந்த சூழ்நிலையில், நேற்று காலை 6.15 மணிக்கு மகள் சவுந்தர்யாவுடன் ரஜினி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காரில் வந்தார். ஐதராபாத்துக்குத்தான் செல்ல போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அவர் 6.50 மணிக்கு மைசூர் செல்வதற்காக வந்துள்ளார் என்பதும், அங்கிருந்து கார் மூலம் ஊட்டி அருகே தமிழக எல்லையில் உள்ள பந்திப்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக செல்கிறார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு காலை 6.30 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தார். ஆனால், மைசூரில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் தாமதமாக 7.10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் புறப்பட்டவில்லை. வானிலை சீராகவில்லை, 7.30 மணிக்கு விமானம் புறப்படும் என்றும், அதற்கு பிறகு, 8 மணி புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு வழியாக காலை 8.20 மணிக்கு அந்த விமானம் மைசூர் புறப்பட்டு சென்றது. இதனால் ரஜினி, சவுந்தர்யா உள்பட 67 பயணிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் விமானத்துக்குள்ளே தவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: