பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் அம்மா உணவகங்களுக்கு ஓராண்டில் 4 கோடி வருவாய் சரிவு

* மேம்பாட்டு திட்டங்கள் தயார்

* விரைவில் முதல்வரிடம் அறிக்கை

சென்னை:அம்மா உணவகங்களின் மூலம் கிடைக்கும் விற்பனை வருவாய் கடந்த ஆண்டு 4 கோடி குறைந்துள்ளது. இதன் மூலம் அம்மா உணவகங்கள் ெபாதுமக்களிடம் வரவேற்பை இழந்து வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.  சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு காலை நேரங்களில் இட்லி 1 ரூபாயக்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும்,  மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும்,   இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு அம்மா உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த கடந்த ஆண்டு அம்மா உணவகங்களின் விற்பனை வருவாய் ₹4 கோடி வரை சரிந்துள்ளது. 2017 - 18ம் ஆண்டில் அம்மா உணவகங்களின் விற்பனை மூலம் மாநகராட்சிக்கு ₹28.29 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2018-19ம் ஆண்டில் இந்த வருவாய் 4 கோடி குறைந்துள்ளது. இதன்படி இந்தாண்டில் விற்பனை மூலம் ₹24.87 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அம்மா உணவத்தை மேம்படுத்துவது தொடர்பாக 5 திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்தது.  இதன்படி அம்மா உணவகத்தை நடத்தவும் மேம்படுத்தவும் ஒரு டிரஸ்ட் அல்லது நிதியை உருவாக்குதல், பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை திரட்டுதல், அம்மா உணவகத்தை தத்தெடுத்தல், ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்தல் உள்ளிட்ட 5 திட்டங்களை இந்த குழு பரிந்துரை செய்தது. இந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இந்த வாரத்திற்குள் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் அனுமதியுடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: