ஈசிஆரில் விதிமீறி கட்டிய கட்டிடங்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில், உயரலை எழும்பும் இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின்  விபரங்களை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்,  சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழக பொதுபணித்துறை, கடலோர ஒழங்குமுறை மண்டலம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்,  முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதிகள், உயரலை  எழும்பும் பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை, வரைபட விபரம், கூகுள் வரைபடத்தில் கட்டிடம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் உள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பியும் தற்போது வரை 400 கட்டிட தாரர்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி மற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: