சட்டவிரோத பேனர்கள் வைக்கமாட்டோம் என்று திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் ஏன் உத்தரவாதம் தரவில்லை? அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சட்டவிரோத பேனர்கள் வைக்க மாட்டோம் என்று திமுக, அதிமுக தவிர பிற கட்சிகள் ஏன் உத்தரவாதம் தரவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோத பேனர்கள் வைப்பதை தடுக்குமாறும், பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் சட்ட விரோத பேனர்கள் அகற்றப்படாததால் சட்டவிரோத பேனர்கள் வைப்பதை தடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும், பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானது தொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.  

அப்போது தமிழக அரசு சார்பில் மாநில அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன்ஆஜராகி, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாகதடுக்கப்பட்டுள்ளது. பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சுபஸ்ரீ மரணத்துக்கு முன்பு சட்டவிரோதமாக பேனர்கள் வைத்ததாக எத்தனை வழக்குகள், எத்தனை பேர் மீது பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளின் நிலை என்ன  என்று கேட்டனர். இதுகுறித்து விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசியல் கட்சிகள்முன்வர வேண்டும். அவர்கள் இனி அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, திமுக உடனடியாக உத்தரவாதம் தந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதிமுகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் இதுவரை ஏன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை?. சட்டவிதிகளை பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவு எடுப்பது தொடர்பாக மாநகரட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி துணை ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: