சிஏஏ போராட்டத்தில் போலீஸ் தாக்குதல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் ராகுல், பிரியங்கா காந்தி புகார்

புதுடெல்லி: ‘‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில், போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று வலியுறுத்தினர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான குழு டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்தனர். அப்போது 31 பக்க மனு ஒன்றையும், வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களையும் அளித்தனர். அதில், உத்தரப் பிரதேசத்தில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில், போலீசாரின் அடக்குமுறை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. மனுவில் கூறியிருப்பதாவது:

உ.பி பா.ஜ அரசு, தனது சொந்த மக்களை குற்றவாளிகள்போல் நடத்தியுள்ளது. சாதாரண மக்கள் மீது போலீசார் வெறுப்பை காட்டியுள்ளனர். அவர்கள் மீது தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்து அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அநீதி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரலாறு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரவிசங்கர் பிரசாத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்

சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் நடைபெறும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘டெல்லி ஷாகீன்பாக்கில் நடைபெறும் போராட்டம், சிஏஏ.வுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் சிறு, சிறு கும்பல்களுக்கு எல்லாம் இடம் அளிக்கிறது’’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘உண்மையான சிறு, சிறு கும்பல் ஆளும் கட்சிதான். அது மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துவதில் உறுதியாக உள்ளது. ஷாகீன்பாக் போராட்டத்தை கேலி செய்திருப்பது, காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரக போராட்டத்தை கேலி செய்வதற்கு சமமானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: