அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

கலிபோர்னியா: அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். என்பிஏ கூடைப்பந்தாட்ட தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடி உலகப் புகழ் பெற்றவர் பிரையன்ட் (41 வயது). 5 முறை என்பிஏ சாம்பியனான அவர் ஒலிம்பிக்சில் 2 தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்சில் இருந்து பிரையன்ட், அவரது மகள் கியன்னா மரியா (13 வயது) உட்பட 9 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று கலிபோர்னியா மாகாணம் கலாபசாஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிரையன்ட் உட்பட அனைவரும் பலியானதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆரஞ்சு கோஸ்ட் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி பயிற்சியாளர் ஜான் அல்டோபெல்லி, அவரது மகள் அலிஸ்ஸா, மனைவி கெர்ரி ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.சிறுமிகள் கியன்னா, அலிஸ்ஸா இருவரும் ஒரே அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. பிரையன்ட்டின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து கூடைப்பந்தாட்ட மைதானங்களிலும் அவரது படங்களை வைத்து ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: