×

ஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் நேற்று மோதிய நடால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிய கிர்ஜியோஸ் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் விடாப்பிடியாகப் புள்ளிகளை குவித்து முன்னேறினர். டை பிரேக்கர் வரை நீடித்த இந்த செட்டில் நடால் 7-6 (8-6) என வென்று 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றார். 4வது செட்டிலும் கிர்ஜியோஸ் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாகச் சென்றது.

இதில் கடுமையாகப் போராடிய நடால் 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.மிகவும் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களை மகிழ்வித்த இந்த போட்டி 3 மணி, 38 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 4வது சுற்றில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் (4வது ரேங்க்) 2-6, 6-2, 6-4, 6-7 (2-7), 2-6 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவிடம் (15வது ரேங்க்) போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 3 மணி, 25 நிமிடத்துக்கு நடந்தது. ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.ஹாலெப் அபாரம்: மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் களமிறங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் எலிஸ் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் கிகி பெர்டன்சை (நெதர்லாந்து) வென்றார்.

ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதிய அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா) 6-7 (5-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 37 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையன் - மைக் பிரையன் ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஐவன் டோடிக் (குரோஷியா) - பிலிப் போலாசெக் (ஸ்லோவகியா) ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Tags : Muguruza ,Nadal ,Australian Open ,Halep ,Quarter , Australian Open, Nadal,Halep, Muguruza in progress
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...