கொரோனா வைரஸ் பீதி, பட்ஜெட் எதிர்பார்ப்பு பங்குச்சந்தைகள் கடும் சரிவு 1 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் கவலை

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். கடந்த வார இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று, பங்குச்சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் துவக்கத்தில் 41,510.68 புள்ளிகளாக இருந்தது. அதிக பட்சமாக 41,516.27 புள்ளிகள் வரை சென்றது. ஏற்றம் சில நிமிடங்கள் கூட இது நீடிக்கவில்லை. தொடர்ந்து சரியத்துவங்கியது. வர்த்தக இறுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையை விட 458.07 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக இடையில் 500 புள்ளிகள் வரை வீழ்ச்சி ஏற்பட்டது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 129.25 புள்ளிகள் சரிந்து 12,119 புள்ளிகளாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிர்ப்பலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு சுமார் 80 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2,700க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கட்டுப்படுத்த இயலவில்லை என சீன அரசு கூறிவிட்டது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்ந்துள்ளனர்.  இந்த பாதிப்பு இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் எந்தெந்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழில்துறையினர் எதிர்நோக்கியுள்ளனர். வரி குறைப்பு உட்பட அவர்கள் தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அரசு பரிசீலிக்குமா என்ற கவலையும் காணப்படுகிறது. இவற்றால்தான், இந்திய பங்குச்சநதைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. இது கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட 2வது மிகப்பெரிய சரிவு என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பங்குச்சந்தைகள் திடீர் சரிவால், மும்பை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது. கடந்த வார இறுதியில் இந்த பங்குகளின் மதிப்பு 1,60,27,558.60 கோடியாக இருந்தது. நேற்று 1,03,153.71 கோடி சரிந்து, 1,59,24,404.89 கோடியாக இருந்தது.

Related Stories: