அரசுக்கு எதிரான மற்றும் அதிமுக கொள்கைக்கு மாறாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அரசுக்கு எதிரான மற்றும் அதிமுக கட்சியின் கொள்கைக்கு மாறாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்வர் எடப்பாடி எச்சரித்துள்ளார். ஒரே விவகாரத்தில் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவிப்பது, கட்சிக்கு விரோதமாக பேசுவது என்று கட்டுப்பாடு இல்லாமல் அமைச்சர்கள் செயல்படுவதால், கோட்டையில் இன்று மாலை ஒவ்வொரு அமைச்சருடனும் தனித்தனியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவி விலகும்படி கூறிவிட்டு, சசிகலாவே முதல்வர் பதவி ஏற்க முடிவு செய்தார். இதனால் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் சென்றனர். இதனால் கட்சி உடைந்தது. இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்எல்ஏக்கள் என்று யாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்டுப்படாமல் இருந்தனர். பின்னர் ஒவ்வொரு விவகாரத்திலும் அவர் அமைச்சர்களை கண்டிக்க ஆரம்பித்தார். பிரதமர் மோடியின் ஆதரவு முழுமையாக இருப்பதை நிரூபித்தார். இதனால் அனைத்து அமைச்சர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்டுப்பட ஆரம்பித்தனர். இதனால் ஒவ்வொரு துறையிலும் அவர் நேரடியாக ஆய்வு செய்யத் தொடங்கினார். கடைசியாக, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் துறையிலும் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். துணை முதல்வரின் துறையிலேயே ஆலோசனை நடத்தியதால், அதிகாரிகளும் பயப்பட ஆரம்பித்தனர்.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் மட்டும் டெல்லி மேலிடத்தில் நேரடியாக தொடர்பு வைத்திருந்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமியை அனுசரித்து செல்ல ஆரம்பித்தனர். அதேநேரத்தில், கட்சியில் தான் சொல்ல நினைப்பதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மூலம் சொல்ல ஆரம்பித்தார். ஜெயக்குமார் சொல்வதுதான் கட்சியின் கருத்தாக இதுவரை இருந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் கருத்தை மீறி சில அமைச்சர்கள் தனித்தனியாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். அதில், சிவகங்கையைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன், `பாஜவை எப்போது கழட்டி விடலாம்னு நாங்கள் நினைக்கிறோம்னு பேட்டி கொடுத்தார். இது எடப்பாடிக்கு தெரிந்ததும், பாஸ்கரனை சத்தம் போட்டார். அவ்வளவுதான் மாலையிலேயே தான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் பல்டி அடித்தார்.

அதேபோல, ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கருப்பண்ணன் ஆகியோர் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தனர். ரஜினி விவகாரத்தில், பெரியாருக்கு ஆதரவாகவும், ரஜினியை கண்டித்தும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே கருத்தை தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ரஜினிக்கு ஆதரவாக பேட்டி அளித்தார். இது கட்சிக்குள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ராஜேந்திர பாலாஜியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

இந்தநிலையில், சசிகலா சிறையில் கஷ்டப்படுகிறார். அவர் சிறையில் இருந்து சீக்கிரம் வெளியில் வரவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேட்டி அளித்தார். இது கட்சியினருக்கு குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், திமுகவினர் வெற்றி பெற்ற உள்ளாட்சிகளுக்கு அரசு சார்பில் நிதி வழங்க மாட்டோம் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். இது குறித்து தமிழக கவர்னரிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் செய்தார்.

இவ்வாறு அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாக இஷ்டத்துக்கு செயல்படுவது கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது, பொதுமக்களிடம் கடும் விமர்சனத்தையும், அவர்கள் மீதான மதிப்பையுமம் கெடுக்க ஆரம்பித்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினார். அதே நேரம், தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் அதிமுக - பாஜ கட்சி நீடிக்க வேண்டும் என்று இரண்டு கட்சிகளின் மேலிடமும் விரும்புகிறது.

அதனால் தமிழக அமைச்சர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்க முதல்வர் எடப்பாடி முடிவு செய்தார். அதன்படி நேற்று மாலை அமைச்சர்கள் அனைவரும் கோட்டையில் தங்களது அறையில் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரையும் நான் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தப்போகிறேன் என்று முதல்வர் எடப்பாடி தகவல் அனுப்பி இருந்தார். முதல்வர் உத்தரவுப்படி நேற்று (திங்கள்) மாலை அனைத்து அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் முதல்வரின் அழைப்புக்காக காத்திருந்தனர். முதல்வரும் நேற்று மாலை 4.30 மணி முதல் ஒவ்வொரு அமைச்சராக அழைத்து பேசினார்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார், எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, மாபா.பாண்டியராஜன், நிலோபர்கபில், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்களை முதல்வர் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இன்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின்போது, அமைச்சர்கள் பொது இடங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். அமைச்சர்களின் கருத்தை, அதிமுக கருத்தாகவும், அரசின் கருத்தாகவே மக்கள் எடுத்துக் கொள்வார்கள். மூத்த அமைச்சர்கள் மட்டுமே கட்சி தலைமையிடம் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியபின் வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர்கள் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார். மாநகராட்சி. நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் கூட்டணி குறித்து அமைச்சர்கள் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அரசின் சாதனைகளை மட்டும் பொது இடங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, மாபா.பாண்டியராஜன், நிலோபர்கபில், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்களை முதல்வர் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.


Tags : ministers , Government, AIADMK Policy, Ministers Opinion, Strict Action, CM Edappadi, Warning
× RELATED அய்னோவின் அதிரடி!