மயிலாடுதுறையில் ஹைட்ரோ கார்பன் எதிர்த்து தடையை மீறி ஊர்வலம்

* விவசாயிகள், மீனவர்கள் திரண்டனர்
* போலீசார் குவிப்பு

திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறையில் தடையை மீறி விவசாயிகள், மீனவர்கள் திரண்டு கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இந்த முடிவால் டெல்டா மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக அனுமதி கேட்டபோது போலீசார் மறுத்து விட்டனர். திட்டமிட்டபடி நேற்று மாலை போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பேராசிரியர் ஜெயராமன் அறிவித்து இருந்தார். இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய ஏராளமான போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மீத்தேன் திட்டங்களை தமிழக அரசு ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் தடையை மீறி மயிலாடுதுறை அய்யாரப்பர் கோயில் அருகே திருவாரூர் சாலையில் புறப்பட்ட கோரிக்கை ஊர்வலம் கண்ணாரத்தெரு வழியாக சின்னக்கடைவீதியை அடைந்தது. பின்னர் அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நாம்தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழர் உரிமை மீட்பு இயக்கம் போன்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆனால் யாைரயும் போலீசார் கைது செய்யவில்லை. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : rally ,Mayiladuthurai May Day ,Mayiladuthurai , Mayiladuthurai, Hydrocarbon, Prohibition, Procession
× RELATED கட்டிமேடு ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி