×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கிராமசபை தீர்மானம்: அதிகாரி ஏற்க மறுத்ததால் திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல்: கிராமசபை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் தீர்மானம் கொண்டு வந்ததும், அதை அதிகாரி ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ஒன்றியம், சிறுமலை ஊராட்சியில் குடியரசு தினவிழாவையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை பிரதானமான சிறுமலையை விட்டு விட்டு ஊரின் கடைக்கோடியில் உள்ள காட்டுப்பகுதியான தென்மலை பகுதியில் நடத்தினர். இதனால் தென்மலை பகுதி மக்களை தவிர வேறு பகுதி மக்கள் கலந்து கொள்ளவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமை வகிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் கலந்து கொண்டார்.

அடிப்படை வசதிகள் கோரி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மலைக்கிராம மக்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அதை ஏற்க வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் மறுத்து விட்டார். அரசை எதிர்த்து எந்த தீர்மானமும் கொண்டு வர கூடாது என அரசு ஆணையிட்டுள்ளது என்று சொல்லி தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்தார். கடந்த ஊராட்சியின் தனி அதிகாரியின் காலத்தில் குடிநீர் மாரமத்து என்ற பெயரில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

அந்த பணிகளையெல்லாம் மறு ஆய்வு நடத்தி முறைகேட்டை கண்டுபிடிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டனர். ஆனால் அதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்து விட்டார். இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘கிராமசபையை பொதுமக்கள் சபை என்று கூறுவர். ஆனால் இங்கு பொதுமக்கள் கொண்டு வந்த தீர்மானங்களே அனுமதிக்கப்படவில்லை. அப்புறம் எதற்கு இந்த கூட்டம். அதிகாரிகளை வைத்தே நடத்தி முடித்திட வேண்டியதுதானே’’ என்றனர்.

Tags : Citizenship Amendment Act, Resistance, Gram Sabha, Resolution, Officer, Dindigul
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...